‘Gnanap PaadalgaL’ பகுப்புக்கான தொகுப்பு

அறிவே தெய்வம்

மார்ச் 22, 2008

ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல
ஆயிரம் வேதம், அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம்
எனல் கேளீரோ!

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் – எதனூடும்
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று
ஓதி அறியீரோ?

சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?

வேடம் பல கோடி ஓர் உண்மைக்கு உள என்று
வேதம் புகன்றிடுமே – ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ்
வேதம் அறியாதே.

நாமம் பலகோடி ஓர்உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே – ஆங்கே ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அந்
நான்மறை கண்டு இலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே – உப
சாந்த நிலையே வேதாந்த நிலை என்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று
காட்டும் மறைகள் எலாம் – நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல்போல் இங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே – இங்கு,
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறும் கதைகள் சேர்த்து – பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன்
உணர்வு எனும் வேதம் எலாம் – என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன்
உணர்வு எனக் கொள்வாயே.