கண்ணன் பிறப்பு

மார்ச் 23, 2008 by என். சொக்கன்

கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை இசைப்பீர் – நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு

அக்கினி வந்தான் – அவன்
திக்கை வளைத்தான் – புவியார்
இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்

மிக்க திரளாய் – சுரர்,
இக்கணம் தன்னில் – இங்கு
மேவி நிறைந்தனர், பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை

சங்கரன் வந்தான் – இங்கு
மங்கலம் என்றான் – நல்ல
சந்திரன் வந்து இன்னமுதைப் பொழிந்தனன்,
பங்கம் ஒன்று இல்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள் – கலை
மங்கையும் வந்தாள் – இன்பக்
காளி, பராசக்தி அன்புடன் எய்தினள்,
செங்கமலத்தாள் – எழில்
பொங்கும் முகத்தாள் – திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்

அறிவே தெய்வம்

மார்ச் 22, 2008 by என். சொக்கன்

ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல
ஆயிரம் வேதம், அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம்
எனல் கேளீரோ!

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் – எதனூடும்
நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று
ஓதி அறியீரோ?

சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?

வேடம் பல கோடி ஓர் உண்மைக்கு உள என்று
வேதம் புகன்றிடுமே – ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ்
வேதம் அறியாதே.

நாமம் பலகோடி ஓர்உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே – ஆங்கே ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அந்
நான்மறை கண்டு இலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே – உப
சாந்த நிலையே வேதாந்த நிலை என்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று
காட்டும் மறைகள் எலாம் – நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல்போல் இங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே – இங்கு,
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறும் கதைகள் சேர்த்து – பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன்
உணர்வு எனும் வேதம் எலாம் – என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அ.·.து உன்
உணர்வு எனக் கொள்வாயே.

வேண்டும்

மார்ச் 21, 2008 by என். சொக்கன்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்!

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!